கருப்பட்டியும் இனிப்பான கதைகளும்…


சுண்ணாம்பு அதிகம் தீட்டப்பட்ட கலையத்தில் இறக்கிய பதநீரைக் கொண்டு காய்ச்சும்  கருப்பட்டி இறுக்கமாக இருக்கும்.

ஏழைக்கேத்த எள்ளுருண்டை:

எள் விளையும் காலத்தில் எள்ளை நன்றாகப் புடைத்து கல்நீக்கி அதனுடன் கருப்பட்டி கலந்து உரலிலிட்டு இடிப்பார்கள்.எள்மாவும் கருப்புக்கட்டியும் கலந்துவிடும்.எள்ளில் உள்ள எண்ணெய் பசை இம்மாவில் படிந்து இம்மாவை ஈரத்தன்மை ஆக்கிவிடும்.இதனால் இதைப் பிசைந்து,வேண்டிய அளவுக்கு உருண்டையாக உருட்டிவைப்பார்கள்.


எள்ளின் மணமும் கருப்பட்டியின் இனிப்பும் இரண்டறக் கலந்து மிகவும் சுவையான தின்பண்டமாக அமையும்.பிள்ளையார் சதுர்த்தி அன்று எள்ளுருண்டை படைத்து வழிபடுவது வழக்கம்.

பானைக் கருப்பட்டி(கலயக் கருப்பட்டி):


பாகின் ஈரத்தன்மையைப் புதியமண் பானை உறிஞ்ச பாகு தன் ஈரத்தன்மையை இழந்து கட்டியாகிவிடும்.பானையில் இட்ட பொருட்கள் பாகுடன் உறைந்து ஒன்றாகிவிடும்.
இம்முறையின் வளர்ச்சி நிலையாக மாங்காய்,திருகிய தேங்காய்,கத்தரிக்காய்,காரட்,பீட்ருட்,தடியங்காய்,கொட்டை நீக்கிய பலாச்சுளை,அன்னாட்சி பழத்துண்டுகள் ஆகியவற்றை இட்டு அக்கானியை (கருப்பட்டி பாகை) ஊற்றிவிடுவர்.இது தின்பண்டம் போல பின்னர் பயன்படுத்தப்படும்.

பாகு கத்திரிக்காய்:


இராமக் கத்திரிக்காய் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் விளையும் சுவையான கத்திரிக்காய் ,இதனை துண்டு துண்டாகப் வெட்டி பதநீர்ப் பாகில் போட்டு நன்றாகக் கிளறி புதுப்பானையில் போட்டு வைப்பர்.குறைந்தது ஒரு மாதம் வைத்திருந்து பின்னர் உண்பர்.

வரலாறு:


1526ம் ஆண்டு மார்ச் 7ம் நாளன்று,ஒரு பலம் கருப்பட்டி ஏழு பணம் என்ற விலையில்,மானுவல் காமா (வாஸ்கோடா காமாவின் மகன்) என்ற போர்ச்சுக்கீசிய வணிகர் விலைக்கு வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தின் வழியே அனுப்பி உள்ளார்.-ஜெயக்குமார்.பா  (தமிழகத் துறைமுகங்கள்)

சேனை கொடுத்தல்:


காயம்,கருப்பட்டி இரண்டையும் தூளாக்கி அதைப் பழைய சோற்றில் ஊறிய தண்ணீரில் கரைத்து விரலால் அதைத் தொட்டுப் பிறந்த குழந்தையின் நாவில் தடவுவர்.


பெத்லகேமில் பிறந்த யேசுநாதருக்கு சம்மனசுகள் சேனை கொடுத்த நிகழ்வை கூறும் நாட்டார் பாடல் ஒன்று உண்டு.
களி:


குழந்தை பெற்ற தாய்க்கு வழங்கப்படும் மருந்திலும் கருப்பட்டி இடம்பெறுகிறது.இஞ்சிக் களி,சுக்குக்களி ,வெந்தயக்களி என்ற பெயரில் கிண்டப்படும் லேகியங்களே களி எனப்படுகின்றன.இக்களி தாயாரிப்பில் கருப்பட்டி முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

தானாப்புளி இடித்தல்:


புளியங்காய்,எலுமிச்சை இலை,மிளகாய் வற்றல்,உப்பு,கருப்பட்டி இவற்றை உரலில் இட்டு இடித்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டையாக்கி குச்சி ஒன்றில் குத்தி இன்றைய லாலிபாப் போல் சப்பிப் சாப்பிடுவர்.புளிப்பு-உவர்ப்பு-இனிப்பு  மூன்று சுவைகளின் சங்கமமாக இருக்கும்.

கும்மாயம்:


புழுக்கிய பச்சை  பயிற்றோடு கருப்பட்டி முதலிய கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி. (உ.வே.சா )இன்று நெல்லை சீமையில் கும்மியானம் என்ற பெயரில் ஆடி மாத இறுதியில் கும்மாயம் (பாயாசம் போன்ற) தயாரிக்கப்படுகிறது.பாசிப்பருப்புடன் நவதானியங்களையும் சேர்த்து கொள்கின்றனர்.

பனை மரமே பனை மரமே

ஆ.சிவசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published.