சமீபத்தில் கருப்பட்டி வாங்கினேன்,இருவேறு கடைகளில் ஒன்று நாட்டு மருந்து கடை மற்றொன்று பலசரக்கு கடை. அந்த இரண்டு கருப்பட்டியின் படங்களும் இங்கே புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.ஆனால் ஒட்டுமொத்தமாக அவற்றின் தரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உணர்கின்றேன்.

ஒன்று ஒட்டுமொத்தமாக மிக நல்ல சுவையுடன் உள்ளது மற்றொன்று பூரணமான போலியாக உள்ளது.
இந்தப் பூவுலகில் நல்லதும் கெட்டதும் கலந்து இருப்பதைப்போல அது இருக்கின்றது.எவ்வாறு நல்ல பொருட்களை விஷயங்களை அடையாளம் காண்பது.நிச்சயம் நம் அனைவருக்குள்ளும் சுவை உணர்வு உள்ளது, வாசனை உணர்வு கூடவுள்ளது .இவற்றை நாம் நெடுங்காலமாக பயன்படுத்தவில்லை ,எனக்கு தெரிந்ததெல்லாம் என்னிடம் உள்ளது அந்த சுவையுணர்வு மட்டுமே. அந்த இரு கருப்பட்டியையும் சாப்பிட்டு அடுத்த நொடி எனக்கு தெரிந்தது இவ்வளவு நேர்த்தியாக அவர்கள் போலியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று.இருந்த போதிலும் நாம் எந்தப் பொருளை வாங்கினாலும் அதை சிறிது கையிலெடுத்து தொட்டு தடவி நசுக்கி பார்த்து அது சாப்பிடும் பொருளாக இருந்தால் தயங்காமல் வாயில் போட்டு சுவைத்து அதன் வாசத்தை முகர்ந்து பார்க்கலாம்.

எப்படி பார்த்து வாங்க வேண்டும் நிச்சயம் ஆரம்பத்தில் நமக்கு தெரியாமல் போகலாம் .ஆனால் கண்டிப்பாக நாள் செல்ல செல்ல தான் நம்மால் கண்டுபிடிக்க இயலும். இது எனது அனுபவத்தில் இருந்து நான் சொல்கிறேன்.சிறு வயதில் கருப்பட்டி,பனங்கற்கன்டு,சுக்கு கருப்பட்டி,சில்லு கருப்பட்டி சுவைத்தது. அதற்கப்புறம் பெரிய தொடர்பு ஒன்றுமில்லை இந்த ஆறு வருடங்களாக மட்டும்தான் இந்த கருப்பட்டியுடன் இந்த பயணம் உள்ளது.

நல்ல கருப்பட்டியை அடையாளம் காண பல வழிமுறைகள் இருந்தாலும்,என் அளவில் இந்த சுவையுணர்வு மிக முக்கியம்,இதை அடுத்த தலைமுறைக்கும் அப்போதுதான் கடத்த முடியும்.பலசரக்கு கடையோ,நேரடி கொள்முதலோ,ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்குவீர்களோ கருப்பட்டியை உடைத்து வாயில் போடுங்கள்,தயங்காதீர்கள் அதன் பிசுபிசுப்பு நமக்கு புலப்படும். சின்னதா கடைசியா நர நரன்னு மண்ணு தட்டுபடுதா வாயில். ரொம்ப தித்திக்கும் சுவை இருக்கா.
நீங்கள் என்ன உணர்கரீர்களோ அதை வெளிப்படையாக எதிரில் இருப்பவரிடம் (வியாபாரியோ,கடைக்காரர் யாராக இருந்தாலும்) சொல்லுங்கள். எந்த ஊர் கருப்பட்டி என்று கேளுங்கள்.எங்க விளைஞ்சது ,புதுசா,பலசா எவ்வளவு நாள் வைச்சு இருக்கலாம். இந்த மழைக்காலத்தில் கசிந்து போனா என்ன செய்வது, ஏன் ஒவ்வொரு முறையும் வேற வேற நிறத்தில் இருக்கு.இரு வேறு தரங்கள் இருந்தால் காரணம் கேளுங்கள்.

சில பொதுவான சலிப்பூட்டும் வழக்கமான பதில்கள் தாண்டி,நிச்சயம் பல நல்ல தேவையான தகவல்கள் கிடைக்கும். ஒவ்வொரு ஊருக்கும் அந்த மண்ணுக்கும் காத்துக்கும் ஏத்த மாதிரி கருப்பட்டியின் நிறம்,சுவை,மனம் இருக்கும். பதநீர் காய்ச்சிய விதம்,இருப்பில் இருக்கும்போது பராமரித்த விதம் இப்படி தெரிந்து கொள்ள நிறைய இருக்கு. நாம கேள்வி கேட்டால் கலப்படம் குறையும் நிச்சயம்.

நிறைய பேரு என்கிட்ட கருப்பட்டி சாப்பிடுறதேயே விட்டுவிட்டேன் சொல்றாங்க. அப்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு பல தலைமுறை தாண்டி நம்ம கிட்ட வந்து இருக்கு. நிராகரித்து விட வேண்டாம், நல்ல பொருள் கிடைக்குது,ஆனா ஒவ்வொரு முறையும் பரிசோதிச்சு வாங்குங்க. உங்கள் சுவையுணர்வு நம்புங்கள், வீட்டில் இருக்கும் வயசானவங்க கிட்ட உரையாடல் துவங்குங்க. சும்மா இருக்கும் போது எல்லாம் ஒரு துண்டு கருப்பட்டி எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்க.ஒரு முறை நல்ல பொருளை சாப்பிட்டால் அப்புறம் நீங்க ஆயுசுக்கும் விடமாட்டிங்க.

தரமில்லாதது வாங்கி ஏமாந்தாலும் பரவாயில்லை ,அடுத்த முறை நிச்சயம் நல்லது கிடைக்கும். சும்மா தத்துவம் சொல்ல எனக்கு கிடைச்சு இருக்கு. அதனால சொல்றேன். இன்னும் குறிப்பா உங்க ஊர்லேயே முதலில் வாங்குங்க ,அப்புறம் வெளியூரில் இருந்து வாங்குங்க. விடாமல் தொடர்ந்து கருப்பட்டி வாங்குவோம்..நம்ம சுவையுணர்வை மீட்போம்.. அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்

Leave a Reply

Your email address will not be published.