ஒவ்வொரு ஊர்லையும் இப்படி ஒரு இடம் இருந்திருக்கும்,மதுரைல இப்பவும் அப்படி ஒரு இடம் ரொம்ப உயிர்ப்பா இருக்கு.இதுக்கு முன்னாடி கூட இந்த இடத்தை பத்தி சொல்லியிருக்கேன்,ஆனா இந்த மிட்டாய் கடை சந்து ஒரு அதிசய உலகம் …

இன்னும் குழந்தைங்க குழந்தைகளாவே தான் இருக்காங்க ,ஏன்னா அத்தனை வகையான மிட்டாய் இன்னைக்கும் அவ்வளவு உற்பத்தி செஞ்சு விற்பனை செய்றாங்க.

என்ன   விசேஷம்னு கேட்டிங்கன்னா இன்னிக்கும் இருக்குற குழந்தைங்க விரும்பி சாப்பிடுற மாதிரி வித விதமான கலர்ல,பேக்கிங்  மற்றும் சின்ன சின்ன பரிசு பொருட்களோட கண்ணை கவருகிற மாதிரி இருக்கு.

நாம நினைச்சு கிட்டு இருக்கோம்,நாம சின்ன வயசுல தேடி ஓடி சாப்பிட்ட எந்த தின்பண்டமும் இன்னிக்கு இல்லைன்னு.

இருபதுபைசா,பத்து பைசா உள்ள இருக்கிற ஜவ்வு மிட்டாய்

நாக்கு பூராவும் கலர் கலரா போற ரோஸ் கலர் ஜவ்வு மிட்டாய்

இலந்தை பொடி ,இலந்தை வடை,இலந்தை தோசை

பேப்பர் தோசை

குச்சி மிட்டாய் – நிறைய பொம்மைகள் சொருகி இருக்கும்

பரிசு அட்டை

வெள்ளை தேங்காய் மிட்டாய்

பிரவுன் தேங்காய் மிட்டாய்

வெள்ளை தேன் மிட்டாய் ,சிவப்பு தேன் மிட்டாய்

ஆரஞ்சு மிட்டாய்,பாக்கு மிட்டாய்,சூட மிட்டாய்,பூஸ்ட் மிட்டாய் ,ஹார்லிக்ஸ் மிட்டாய் ,மால்ட் மிட்டாய்,சீரக மிட்டாய் ,மாங்காய் மிட்டாய்,பல்லி மிட்டாய் ,அரிசி மிட்டாய்

நூல் சுத்தி இருக்கிற சக்கர மிட்டாய் , சூட மிட்டாய்

அதே ஆரஞ்சு கலர் பேப்பர் சுத்துன புளிப்பு மிட்டாய்

உரைப்பு மிட்டாய்

பொரி உருண்டை

பொட்டு கடலை உருண்டை

கடலை மிட்டாய் ,கொக்கோ மிட்டாய் ,கடலை உருண்டை

இரண்டு கலர் பால்கோவா

மாவு பாக்கெட்

இப்படி 100வகைக்கும் மேலான மிட்டாய்கள் பாக்கெட்டுல ,ஜாரிலும் மொத்த விலைக்கு கிடைக்கிறது .கரீம் சாகிப் பள்ளிவாசல்  இருக்கிற இந்த மிட்டாய் கடை சந்துல 60க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கு .

மதுரையை சுத்தி இருக்குற கிராமங்கள் சின்ன சின்ன ஊர்ல இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிட்டு போய் விக்கிறாங்க.பெரும்பாலும் பள்ளிக்கூடத்தை சுத்தி இருக்குற சின்ன சின்ன கடைகள்,அக்காகள்  நிறைய பெரு பிளார்ட் பார்ம்ல  சாக்கு ,பிளக்ஸ்  விரிச்சு இந்த மிட்டாய்கள் எல்லாம் வித்து தங்களோட அன்றாடத்தை நடத்துறாங்க .மதுரையை சுத்தி இருக்கிற மாவட்டங்கள் மட்டும் இல்லாம எல்லா இடங்களுக்கும் இந்த மிட்டாய்கள் பெட்டி பெட்டியா விற்பனையாகி போகுது .

சாயந்திரம் 6 மணிக்கு மேலதான் ஆட்கள் பல ஊர்ல இருந்தும் வர்றாங்க,முழு  ராத்திரியும் வியாபாரம் நடந்து கிட்டே இருக்கும் .சுருக்கு பை மாதிரி பிளாஸ்டிக் பை நிறைய சில்லறை காசுகள் கொண்டு வந்து டேபிள் மேல வச்சு இருப்பாங்க .எண்ணிப்பார்க்க மாட்டாங்க .இவ்வளவு இருக்குன்னு சொன்ன அப்படியே வாங்கிக்குவாங்க .தேனி ,பெரிய குளம் ,தென்காசி,சிவகங்கை ,கழுகு மலை ,மன்னார்குடி ,ராம்நாடு ,கன்னியாகுமரி இப்படி எல்லா ஊருக்கும் சரக்கு போட்டு மெஷின் பேக்கிங் பண்ணி ட்ரை சைக்கிள்ள  ஏத்தி அந்த அந்த ஊரோட லாரி ,பார்சல் ஆபீஸ் அனுப்பி வைப்பாங்க .மனித உழைப்போட உச்சமா தான் இதை நாம பார்க்கணும் .அத்தனை குடும் பங்கள்  நேரம் காலம் பார்க்காம சில்லறை  காசுக்கு உழைக்கிறாங்க .

வைகை ஆத்தோட ஒரு கரைல பூராவும் இந்த மிட்டாய்களை தயாரிச்சு கொடுக்கிற சின்ன சின்ன கம்பெனிகள் வரிசையா இருக்கு.குட்டி குட்டியான சந்துகுள்ள இடுக்கமான  வீட்டுக்குள் ,குடோனுக்குள்   அடுப்பு வெக்கையோட நாள் பூராவும் நின்னே வேலை செய்வாங்க .இவங்க கை பக்குவம் இப்ப வரை இரு துளி கூட மாறல .இன்னைக்கு எல்லா ஊரோட சூப்பர் மார்கெட்லயும் இதே பண்டங்கள் விக்குது ,அது எல்லாம் ஒட்டு மொத்தமா பெரிய அளவுல மெஷின் போட்டு செய்றாங்க  அதை  மிட்டாய் கடை சந்து பொருட்களோட பேருக்கு கூட ஓப்பிட முடியாது .காலம் காலமா இவங்க அவ்வளவு அர்ப்பணிப்பா அந்த ஒத்த பொருளை பக்குவம் மாறாம செய்றாங்க ,கடை கடையா போய் ஆர்டர் எடுப்பாங்க …நைட் தான் போய் டெலிவரி கொடுப்பாங்க …ஒரு xl வண்டியோ,m 80 வண்டி தான் பெரும்பாலும் வைச்சு இருப்பாங்க  

மதுரையோட முனிச்சாலை முழுக்கவே இது மாதிரி தின்பண்டங்கள் தயாரிச்சு விக்கிறவங்க தான் ,ஒரு சந்து புல்லா கடலை மிட்டாய் ,தேன் மிட்டாய் செய்ற கம்பெனி களா தான் இருக்கும் .இந்த தொழில் சார்ந்த அத்தனை பொருட்களும் அங்கேயே கிடைக்கும் .பாத்திரம் ,வடை சட்டி,கத்தி ,கரண்டி ,சல்லடை ,கண்ணாடி பாட்டில்,மண் அடுப்பு கட்டி கொடுக்கிறவங்க ,மாஸ்டர் ,அவருக்கு உதவுகிற கையாட்கள் இப்படி ஒரு கூட்டமே இருக்கு .ஒன்னு தொட்டு ஒன்னு அப்படியே தொடரும் ,அட்டை பெட்டி செய்றவங்க,பழைய பெட்டி வாங்குறவங்க ,சணல் சாக்கு ,பிளாஸ்டிக்  சாக்கு  விக்குறவங்க,  எல்லாரும் வைகை ஆத்தோட கரைல தான் இருக்காங்க …

வாங்க இந்த உழைக்கிற மக்களை அவங்க தின்பண்டத்தை வாங்கி சாப்பிடுங்க 

    

Leave a Reply

Your email address will not be published.