கருப்பட்டி இனிப்பு உருண்டைகள்

கருப்பட்டி கடலைமிட்டாய் / Karuppati Kadalai Mittai மிட்டாய் தொழில் ஆரம்பித்து மூன்று வருடங்களை கடக்க சரியாக ஒரு மாதம் உள்ளது , ஆனால் இந்த நாள் இன்னும் மிக முக்கியமானது முகநூல் பக்கம் துவங்கப்பட்ட நாள் இது தான் ,இதுவரை கடந்து வந்த அனுபவங்களை, உதவிய நல்ல உள்ளங்களை, சந்தித்த பிரச்சனைகளை ,புதிய முயற்சிகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.இன்று இன்னும் ஒருபடி நிலை முன்னேறியுள்ளேன் .

அடிப்படை தெரியாத ஒரு தொழிலை நீ எப்படி செய்வ? இந்த கேள்வியினை தான் கடந்து வந்தோம்.இன்று ஒவ்வொன்றாய் கற்று கொண்டு அதன் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு இருக்கிறோம்.ஒவ்வொரு நாளும் இங்கு புதியதாக வேலை செய்வது போல் தான் இருக்கின்றது.

ஒரே ஒரு பொருள் தான் உங்க கிட்ட இருக்கா ? மொத்த விலைக்கு கொடுப்பீங்களா ? இந்த இரண்டு தான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்வி .கடலைமிட்டாயினை அதே தரத்துடன் கொடுக்க எடுக்கும் பிரயத்தனங்கள் தான் அதற்கான காரணமாக உள்ளது.இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் கைகளினால் வேலை செய்வது ,அதனை செய்யும் அந்த வேலையாட்களை தக்க வைப்பது வைப்பது என்று நிறைய மெனக்கெடல்கள் உள்ளன.அத்தனை சிரமங்களும் குழந்தைகளின் பிறந்தநாள்,திருமணம் மற்றும் அலுவலக நிகழ்வுகள் என பல தருணங்களில் மக்கள் கடலைமிட்டாயினை பரிசாக கொடுக்கின்ற தருணத்தில் காணாமல் போகிறது .இன்னும் தொடர்ந்து கடைகள் மற்றும் இணையம் வழியே பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்துள்ளது.

முதியவர்களின் விருப்பத்திற்குரிய தின்பண்டமான இது அவர்களின் சுவை ஞாபங்களை மட்டுமல்லாமல் வாசனை ஞாபத்தையும் தூண்டிவிட்டுள்ளதை உணர்கிறோம் .எங்கோ அவர்கள் ஊரில் இருந்த கடலை மிட்டாய் செய்யும் வீடோ,கடையோ விற்றவர் முகமோ நினைவுகளில் வந்து போகின்றதாக பகிர்ந்து கொள்கிறார்கள்.இன்னும் நிறைய பேருக்கு வீட்டில் செய்து பார்த்த அனுபவம் உள்ளது.பொருள் விக்கிறவங்க வாங்குறவங்க செய்றவங்க இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் கிட்ட பேசவும் புரிந்து கொள்ளவும் ஏதோ ஒன்னை இந்த கடலை மிட்டாய் உருவாக்கி இருக்கு …

உருண்டை மனசுக்கு ரொம்ப நெருக்கமான வடிவம், இந்த வடிவத்துல கடலை உருண்டை,எள்ளு உருண்டை இதை செய்ய ரொம்ப நாள் ஆசை ,இப்ப ஒரு ஆறு மாசமா அதற்கான முயற்ச்சி நடந்து நல்ல ஒரு பலன் கிடைச்சு இருக்கு .கருப்பட்டி கடலை உருண்டை அப்புறமா கருப்பு எள்ளு உருண்டை செஞ்சு இருக்கோம்.அம்மா உருண்டை உருட்ட ,அப்பா பாக்கெட்டில் போட்டு கொடுக்க வேலை சிறப்பா முடிஞ்சது .வாய்ல சொல்றது எளிது ஒன்னை செஞ்சு பார்க்கும் போதுதான் அதோட கஷ்ட நஷ்டங்கள் தெரியுது .அடுப்போட அனல்லயே இருக்க மாஸ்டர் எந்த நேரமும் குனிஞ்ச தலை நிமிராம அந்த சூட்டை பொருத்துகிட்ட உருண்டை உருட்டற அக்காக்கள் ,பெட்டி கெட்டி வண்டில தூக்கிட்டு போற தம்பிகள் இப்படி பலபேரோட கூட்டு உழைப்பா இது இருக்கு.

இப்படி எல்லோரும் இந்த முறை சேர்ந்து வேலை செஞ்சோம்.

97 வயசை கடந்து நிற்கும் எங்க அப்பத்தா எள்ளு புடைச்சு(நேம்பி) கொடுத்தப்ப அவங்க கண்ணுல அப்படி ஒரு சந்தோசம் தாத்தாவுக்கு உடம்பு தெம்பு குறைஞ்சு போயி விவசாயத்தை கைவிட்டு கொஞ்ச நாள்ல இறந்தும் போனாரு ,அப்புறமா ஒத்த வீட்டுல ரொம்ப நாள் தனியா தான் அப்பத்தா இருந்தாங்க.அந்த வீட்டோட தானிய கிடங்குல அந்த அறையே முக்கால் வாசி முங்குற மாதிரி நெல்லு கொட்டி கிடக்கும் .பனை ஓலை பெட்டில எள்ளு,கம்பு ,திணை,பச்ச கடலை,கேப்பை,மக்கா சோளம் இப்படி நிறைஞ்சும் இறைஞ்சும் கிடக்கும்.அதுல உச்சி பெட்டில கருப்பட்டியும்,அச்சு வெல்லமும் கிடக்கும்.எனக்கு அப்ப அப்ப ஒரு துண்டு இனிப்பு அப்பத்தா எடுத்து கொடுப்பாங்க.

பாக்குற எல்லா பெரியவங்க கிட்டேயும் நீங்க கருப்பட்டில என்னென்ன இனிப்பு சாப்பிட்டு இருக்கீங்கங்கனு கேள்வியா கேட்டுகிட்டு இருப்பேன்,ஒவ்வொருத்தவங்களுக்கும் அப்பிடி சொல்ல நிறைய இனிப்பு இருந்துச்சு .அதனாலதான் இந்த முறை நான் கேட்டு தெரிஞ்சு கிட்ட 8 வகையான உருண்டை வகைகளை எல்லாம் கருப்பட்டி கலந்து ,முக்கியமா எல்லாம் கடுக்கு,முடுக்குனு கடிச்சு சாப்பிடற மாதிரி செஞ்சு இருக்கோம் .

நெருங்குன நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி வைக்க ஆரம்பிச்சு இருக்கோம் .இந்த வார கடைசிக்குள்ள மக்கள் கைகளுக்கும் கடைகளுக்கும் கொடுக்க போறோம் .

குக்கூ நிலத்திலிருந்து ஆரம்பிச்ச இந்த தொழில் இப்ப எங்களை நாங்க வாழற ஊரை நோக்கிநல்ல படியா நகர்த்தி இருக்கு ,இன்னும் கொஞ்ச நாள் எங்க சொந்த கிராமத்தை நோக்கி இது கைபிடிச்சு கூட்டுட்டு போகும் அப்பிடின்னு நம்புறோம் .

புகைப்படம் : Vinoth Kumar

வடிவமைப்பு : கல்ஆல்

 

Leave a Reply

Your email address will not be published.